Friday, September 13, 2013

சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும். உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !
ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர்.

உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு.

வடக்கே தலை வச்சா என்னாகும்?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டித்தால், நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன!என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள்.  பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் காண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால், இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால், குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால்,வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே, பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!

Monday, September 9, 2013

சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!



விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!
கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!
ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!
என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!
எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.
உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.

வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

விநாயகர் அவதாரம்!

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.
ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.
என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

Friday, September 6, 2013

தாரத்திடம் இவ்ளோ விஷயம் இருக்கா?

உயிர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் சூரியன், சந்திரன், மற்றும் அஷ்டதிக்கு பாலகர்கள் (எட்டுதிசை காவலர்கள்) கண்காணித்துக் கொண்டு இருப்பதாக மகாபாரதம் கூறுகிறது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரே அஷ்டதிக்கு பாலகர்கள். இவர்களில் இந்திரனை வழிபட்டால் செல்வவளம் உண்டாகும். அக்னியை வழிபட்டால் தோற்றப்பொலிவு சிறக்கும். தர்ம வடிவான எமனை வழிபட்டவர்க்கு தீவினை அகலும். நிருதியை வேண்டிக்கொண்டால் பகைவர் பயம் நீங்கும். வருணனை வணங்கினால் நல்ல மழை பொழிவதோடு, விவசாயம் செழித்தோங்கும். வாயுவை சிந்திக்க நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் நிலைக்கும். குபேரனை துதித்தால் சுகபோக வாழ்வு அமையும். மங்கள வடிவமான ஈசானனை வணங்கினால் அஞ்ஞானம் நீங்கி உயிர் மோட்சகதியை அடையும். மற்ற யுகங்களில் எல்லா வழிபாடுகளும் முறையாக நடந்ததால், எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ்ந்தனர். இந்த கலியுகத்தில், லட்சுமியோடு சேர்ந்திருக்கும் குபேர வழிபாடு மட்டுமே உருப்படியாக நடக்கிறது. ஒன்றிரண்டு இடங்களில் மழைக்காக வருணஜெபம் செய்கின்றனர். எல்லா வழிபாடுகளும் உருப்படியாக நடக்க ஆன்மிக அமைப்புகள் முயற்சி எடுத்தால், நாட்டில் நல்லது நடக்கும்.

சுமங்கலிகள் மெட்டி அணிவது ஏன்?

திருமண பந்தம் ஏற்பட்டு விடுவதன் அடையாளம் தாலிகட்டுதல். அது போன்று மணமகளும், மணமகனும் கற்பு நெறியுடனும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது என்று உறுதி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியாக அம்மி மிதித்தல் நடத்தப்படுகிறது. இதன் அடையாளமே மெட்டி அணிவித்தல்.

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை!

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

டயட்டீசியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள்.ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் உணவு. ஒளஷதம் என்றால் மருந்து. உணவே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங் களை நம் முன்னோர் வகுத்தனர்.விரதமாவது.. ஒன்றாவது... மனுஷன் செவ்வாயிலே வெள்ளம் வந்துச்சான்னா ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கான், இதிலே விரதம் கிரதமுனு பாடாபடுத்துறா எங்க அம்மா! என்று இனியும் சொல்ல மாட்டீர்கள் தானே!

திருமண வீட்டில் தாம்பூலம் கொடுப்பது ஏன்?

நீங்கள் ஒரு கல்யாண விழாவுக்கோ, பிற சுபநிகழ்ச்சிகளுக்கோ செல்கிறீர்கள். வரும்போது, தாம்பூலக் கவர் கொடுப்பார்கள். இதற்கு மங்கலம் என்பது மட்டும் காரணமல்ல, அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது. தாம்பூலப்பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு இருக்கும். இந்தப்பையில் எதை வைக்கிறோமோ இல்லையோ.. வெற்றிலை, பாக்கு அவசியம் இருக்க வேண்டும். இது லட்சுமியின் அம்சம். அதனால், ஒருவர் வெற்றிலையை கொடுக்கும் போது, மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.  அறிவியல் ரீதியாக வெற்றிலை ஆரோக்கியத்திற்கும் துணைநிற்கிறது. திருமண வீட்டில் விருந்து சாப்பாடு என்பதால், வயிறு உணவைச் செரிக்க சிரமப்படும். வெற்றிலைச் சாறு ஜீரணசக்தியை அதிகப்படுத்தி செரிக்க உதவுகிறது. நாக்கில் ஏற்படும் சுவையற்ற தன்மையைப் போக்கும் தன்மையும் இதற்குண்டு. வெற்றிலையை தனியாக சாப்பிட்டால் ரத்தஓட்டம் பாதிக்கும். பாக்கை தனியாக சாப்பிட்டால் ரத்தசோகை உண்டாகும். அதனால், வெற்றிலையை பாக்குடன் சேர்த்து உண்பதே முறையானது. வெற்றிலையில் கண்ணுக்குத் தெரியாமல் பூச்சி, புழு தங்கியிருக்கும். அதனால், நன்கு சுத்தம் செய்து அதன் நுனி, நரம்புகளைக் கிள்ளி விட்டு சாப்பிட வேண்டும் என்பதும் கட்டாயம்.