Saturday, March 26, 2011

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
 

 


 
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
 
 
 
ருத்ராட்ச மாலையை அணியும் முறை

குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது  - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.
ருத்ராட்ச வடிவங்கள்

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது
ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்


ருத்ராட்சையின் பிற பெயர்கள்


ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன
ருத்ராட்ச சிவலிங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.
ருத்ராட்சத்தால் ஆன அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

ஆலய தரிசனம் ஏன்?


ஆலய தரிசனம் ஏன்?

ஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும். இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக







1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.


2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.


3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.


4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.


5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.


6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.


7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.


8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.


9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.


11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.


12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

கற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்

 கற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்















கற்பூர தீபம் இடையறாமல், பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும் வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம் தீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறுகற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும். வாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும். கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது. கற்பூர தீப ஆராதனையின் போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் தனக்கு முன் உருண்டு வருவதும் மங்களமாகும். வீட்டுப் பூஜையறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து அடங்குவதே நல்லது. வாயால் ஊதியோ கையால் விசிறியோ அணைப்பது பெருங்குற்றமாகும். கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

Friday, March 25, 2011

சூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்?


தை மாதத்தில் சூரியன் தன் பயணப் பாதையைத் தென் திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாற்றிக் கொள்வதால், இதனை உத்தராயண புண்ணிய காலம் என்று போற்றுவர்.சூரியனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அதில் இருபத்தோரு பெயர்கள் மிகவும் சிறப்பானவை என்று சூரிய புராணம் கூறுகிறது. விகர்தனன், விவஸ்வான், மார்த் தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், கிரிகேஸ்வரன், லோகரட்சகன், திரிலோகன், கர்த்தா, அர்த்தா, தமிஸரகன், தாபனஸ், சசி, சப்தஸ்வர வாகனன், தாபனஸ், கபஸ்தி ஹஸ்தன், பிரம்மா, சர்வ தேவன், லோக சாட்சிகன் என்பவையாகும். பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற சூரியனுக்கு, இந்தியாவில் பல திருத்தலங்களில் கோயில்கள் உள்ளன. அதே போல், சூரியன் வழிபட்ட கோயில்களும் உள்ளன. இருந்தாலும், உதயம், மதியம், அஸ்தமனம் ஆகிய மூன்று காலங்களிலும் வழிபடக்கூடிய கோயில்கள் வட இந்தியாவில் உள்ளன.

உதய காலத்தில் வழிபட வேண்டிய கோயில்...


ஒரிஸ்ஸாவிலுள்ள புவனேஸ்வரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் கோனார்க். கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த சூரியன் கோயில், ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பானால் வழிபடுவதற்காக நிர்மாணித்ததாகப் புராணம் கூறுகிறது. இருந்தாலும், கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனால் பதிமூன்றாம் ஆண்டில் கட்டப்பட்டதாகவும் சரித்திரம் சொல்கிறது. இது உதய காலத்தில் வழிபட வேண்டிய நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்பர். புராணகாலத் தொடர்புடைய இந்த ஆலயத்தில் தாமரை மலரில் சூரியபகவான் நின்ற நிலையில் அருள்புரிகிறார். அவரது இரு பக்கங்களிலும் நான்கு தேவியர்கள் உள்ளார்கள். ஒருபுறம் த்யௌ, ப்ருத்வி எனும் தேவியர்களும் மற்றொருபுறம் உஷை, சந்தியா எனும் தேவியர்களும் காட்சி தருகிறார்கள். இங்கு சங்கு, சக்கரம், வரதமுத்திரை, அபயஹஸ்தத்துடன் நான்கு கரங்கள் கொண்டு சூரிய பகவான் எழுந்தருளி உள்ளார். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயில் மாபெரும் தேர் வடிவில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு எனப்படுகிறது. இத்தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. இத்தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் தோற்றத்தில் அதி அற்புதமாகக் கலைநுட்பத்துடன் வடிவமைத்திருப்பது மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.கோனார்க்  சிற்பக் கலைக்கு உலகப் புகழ் பெற்ற கோயில்.


உச்சி காலத்தில் வழிபட வேண்டிய கோயில்

மூல்தான்  பாகிஸ்தானில் உள்ள இத்திருத்தலத்தை மூல ஸ்தானம் என்றும் கூறுவர். பாகிஸ்தானில் சீனாப்(செனாப் என்றும் கூறுவர்) நதிக்கரையில் உள்ள இந்த சூரியன் கோயில், உச்சி காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்ட ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இங்கு குறிக்கப்பட்டடுள்ள சீனாப் நதியே, முற்காலத்தில் சந்திரபாகா எனும் நதியாக விளங்கி வந்ததால், இத்திருத்தலம் சாம்பபுரம் என்றும் கருதப்படுகிறது. பவிஷ்ய புராணமும் இத்திருத்தலத்தை சாம்பபுரம் என்று கூறுகிறது. முந்நூறு அடி உயரமுள்ள இந்த சூரியன் கோயிலில், சூரியபகவான் மனித உருவில் தமது தொடையில் கைவைத்து அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். இங்கு தங்கத்தால் ஆன சூரிய விக்கிரகம் ஒன்று இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்கோயிலும் பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பனால், தன் தொழுநோயை சூரியபகவான் நீக்கியதற்காக எழுப்பப்பட்டதாகப் புராணம் கூறுகிறது. 

மாலை நேரத்தில் வழிபட வேண்டிய கோயில்

மொதேரா என்னும் திருத்தலம் குஜராத் மாநிலத்தில், அகமாதபாத் நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள சூரிய ஆலயம் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் கோயில் எனப்படுகிறது.பாழடைந்த நிலையில் உள்ள இந்த சூரியக் கோயில், பதினாறாம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்தினரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கருவறையில், கிழக்கு நோக்கி அருள் புரியும் சூரியபகவான் விக்கிரகம் இருந்த இடத்தின்மீது காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அமைப்பில் இக்கோயில் திகழ்ந்திருக்கிறது. இங்குள்ள சூரிய விக்கிரகம் வெகுகாலத்திற்கு முன்பே அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று கோயில்களுமே காலத்தால் சீர்குலைந்திருந்தாலும், ஒரு காலத்தில் சௌர மார்க்கம் எனும் சூரிய வழிபாடு மிக உயர்ந்த நிலையில் இருந்தது என்பதற்கான நினைவுச்சின்னமாக சூரியனின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல் சிறப்பைத்தரும்.



Wednesday, March 23, 2011

வீடு மற்றும் கோயில்களில் செய்யக்கூடாதவைகள்!



1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.


2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.


3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.


4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.


5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.


7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.


8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.


9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது


10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.


11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.


12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.


14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.


15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

16. இடது கையினால் ஜலம் அருந்தக்கூடாது.

விரதங்களும் அவற்றின் பலனும்!




நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.


சோமவார விரதம்


நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.



பிரதோஷம்


நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.


சித்ரா பவுர்ணமி விரதம்


நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.
தை அமாவாசை விரதம்
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
கந்தசஷ்டி விரதம்
நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் :  குழந்தைப்பேறு


மங்களவார விரதம்


நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
உமா மகேஸ்வர விரதம்
நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.


விநாயக சுக்ரவார விரதம்


நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி


கல்யாணசுந்தர விரதம்


நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்


சூல விரதம்


நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்
இடப விரதம்
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு


சுக்ரவார விரதம்


நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்


தைப்பூச விரதம்


நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்


சிவராத்திரி விரதம் 




நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்


திருவாதிரை விரதம்


நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.
கேதார விரதம்


நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்


விநாயகர் சஷ்டி விரதம்


நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.


முருகன் சுக்ரவார விரதம்


நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கிருத்திகை விரதம்


நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்


நவராத்திரி விரதம்


நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!






1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன்: முருகு  அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின்  12 தோள்களை குறிக்கும்.  18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும்.  ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.


பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

Friday, March 18, 2011

ஆன்மீக வகுப்பறை! - II

காலங்களுக்குரிய சிவ தரிசனப் பலன்!
 
காலை - பிணி போக்கும்
நண்பகல் - தனம் பெருகும்
சந்தியாகாலம் (மாலை) - பாவம் அகற்றும்
அர்த்த சாமம் - வீடுபேறு அளிக்கும்.
 
 
 

ஆன்மீக வகுப்பறை! - விநாயகரின் ஐந்து கரங்கள்

1. துதிக்கையில் நீர்க்குடம்
2. பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம்
3. முன் கைகளில் ஒடிந்த கொம்பு (தந்தம்) இடக்கையில் மோதகம் அமுத கலசம் என்றும் கூறப்படும்.

அஷ்ட ஐசுவரியம்!

தனம், தான்யம், நிதி, பசு,
புத்திரர், வாகனம், இசை, தைர்யம்.


அஷ்ட பரிமளம்


சந்தனம், புனுகு, கோரோசனை, கஸ்தூரி, ஜவ்வாது, அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ இவைகளின் அபிஷேகம் சிவனுக்கு உகந்தது.
செல்வம், சுற்றம், புகழ், நற்செயல், கல்வி இவை வரிசைப்படி ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறந்தது.

Friday, March 4, 2011

கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!




                              கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.








அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.



மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.


4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.


5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால்  30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.


6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.


7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.



8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.


9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான்
காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.


10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.


11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.


12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.


13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.


14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.


15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.


16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.


17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.


18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.


19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும்  மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.


20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.


21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார்

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?






பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே!  என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

மக்கள் காளிக்கு பயந்தது ஏன்

 காளி


 ஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு. இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா ? சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்டுமின்றி , அவர்கள் காட்டுக்கு சென்று 12 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தவ முனிவர்களைத் தவிர மற்றவர் கண்ணில் பட்டால், அவர்களின் வனவாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அர்ஜூனன் தனது வலிமை மிக்க ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் புதரில் ஒளித்து வைத்தான். காலம் வரும் போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என இருந்தனர். அந்த வன்னிமரம் தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆயுதங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாக இருந்தது. அவர்கள் முனிவர்களின் ஆலோசனையின் பேரில், துர்க்கை அல்லது காளியின் இருப்படிமான குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். அந்த கோயில்களுக்குள் பயந்து போய் யாரும் நுழைவதில்லை. பாண்டவர்களுக்கு இனி வசதியாயிற்று. அஞ்சாநெஞ்சம் கொண்ட அவர்களைப் பாராட்டி பராசக்தியின் வடிவமான அந்த காளிதேவியே காட்சி கொடுத்தாள். காளியின் காட்சியை மனக்கண்ணால் கண்டால் கூட போதும். அவர்களைத் துன்பம் தொடராது. ஏழ்மை என்பதே இருக்காது. துக்கம், பயம் இதெல்லாம் நெருங்காது.


மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள்.

ஆலய தரிசனம் ஏன்?










ஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும். இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்